நரி மாட்டிகிச்சு!

Posted by Esha Tips on Thursday, February 28, 2013

ஒரு கிராமத்தின் ஒதுக்குப்புறமாக இருந்த மடத்தில் ஒரு சந்நியாசி இருந்தான். அவன் பெயர் தேவசன்மா. அவன் பிச்சை எடுத்துச் சேர்த்த காசையெல்லாம் கந்தையில் முடித்துத் தன் அக்குளில் வைத்துக் கொண்டு திரிந்தான். இரவும் பகலும் அந்தக் கந்தை அவனை விட்டு நீங்காமல் இருந்தது.
சந்நியாசி பணமுடிப்பை எப்போதும் அக்குளில் வைத்துக் கொண்டு திரிவதை திருடன் ஒருவன் கவனித்துப் பார்த்தான். அந்தப் பணப்பையை எப்படித் திருடலாம் என்று யோசித்தான். இதற்கு அவன் ஒரு சூழ்ச்சி செய்தான். ஒருநாள் சந்நியாசியிடம் சென்று, சந்நியாசியின் கால்களில் விழுந்து வணங்கினான்.

""சுவாமிகளே! இந்த உலகமே ஒரு மாயை... காலை மலர்ந்து மாலை உதிரும் மலருக்கு ஒப்பானது. வாழ்க்கையோ காய்ந்த புல்லில் பற்றிக் கொண்ட நெருப்புப் போன்றது. வாலிபப் பருவமோ அருவியின் வேகத்தைப் போன்றது. இவை அனைத்தையும் நான் நன்றாக உணர்ந்தவன். தங்களிடம் உபதேசம் கேட்க வந்திருக்கிறேன். என்னைச் சீடனாக ஏற்றுக் கொண்டு நல்வழி காட்ட வேண்டும்!'' என்று வேண்டினான்.
 
தேவசன்மாவும் அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டான். அந்தத் திருடனும் மிகவும் நல்லவன் போல் சந்நியாசிக்குப் பணிவிடைகள் செய்து வந்தான்.
 
ஒருநாள் ஓர் அந்தணன் இவர்களுக்கு விருந்து வைத்தான். விருந்துண்டு சென்ற பிறகு, சீடன் தன் தலையில் கிடந்த ஒரு துரும்பைக் காட்டி, ""சுவாமி! நமக்குச் சோறு போட்ட அந்தணன் வீட்டிலிருந்த இந்தத் துரும்பு என்னையும் அறியாமல் ஒட்டிக் கொண்டு வந்து விட்டது. உணவழித்தவன் வீட்டுப் பொருளை ஒரு துரும்பானாலும் எடுத்து வரலாமா? இதோ நான் ஓடிப்போய் இதைத் திருப்பிக் கொடுத்து விட்டு வந்து விடுகிறேன்!'' என்று கூறி ஓடினான்.
 
சிறிது தூரம் சென்று ஒரு மறைவான இடத்தில் நெடுநேரம் உட்கார்ந்திருந்து விட்டு அவன் திரும்பி வந்தான். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தேவசன்மாவுக்குத் தன் சீடன் மேல் நம்பிக்கை அதிகமானது.
 
ஒருநாள் சந்நியாசியும் சீடனும் ஒரு குளக்கரையை அடைந்தனர். குளத்தில் இறங்கிக் கைகால் கழுவிக் கொண்டு வருவதாக சந்நியாசி போகும்போது கரையில் இருந்த சீடனிடம் என்றும் விட்டுப் பிரியாத கந்தை முடிப்பைக் கொடுத்து, வைத்திருக்கும் படி கூறிவிட்டுப் போனார்.
 
சந்நியாசி கைகால் கழுவிக் கொண்டு திரும்பும் போது குளத்தின் எதிர் கரையில் இரண்டு செம்மறி ஆடுகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. ஆடுகள் இரண்டும் ஆங்காரத்தோடு விலகிப் பின் வாங்குவதும் மீண்டும் ஓடிவந்து ஒன்றையொன்று முட்டி மோதிக் கொள்வதுமாக இருந்தன. மண்டையில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது.
 
தூரத்திலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த குள்ளநரி ஒன்று கீழே சொட்டும் ரத்தத்தை நக்கிச் சாப்பிட எண்ணி அங்கு வந்தது. ஆடுகள் விலகிப் பின்னடையும் போது புகுந்து ரத்தத் துளிகளை நக்கிச் சுவைத்தது. ஆடுகள் முட்டிக் கொள்ள முன்னே வரும் போது நரி தந்திரமாக பின்னே சென்று விடும். இவ்வாறு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார் சந்நியாசி.
 
"அடப்பாவமே! இந்தக் குள்ள நரியின் முட்டாள் தனத்தை என்னவென்று சொல்வது? ஆட்டுச் சண்டையின் மத்தியில் அது சிக்கிக் கொண்டால் நிச்சயமாக அது செத்துப்போகுமே; வேறு எதுவும் நடக்கப் போகிற மாதிரி எனக்குத் தோன்றவில்லை!' என்று எண்ணிச் சிரித்தார்.
 
மறுபடியும் ஆடுகள் முட்டிச் சண்டையிட நெருங்கின. ரத்தத்தைச் சுவைத்து ருசி கண்ட நரி ஆவலோடு இப்போது நெருங்கி வந்து கொண்டே இருந்தது. ஆடுகளின் மத்தியில் வசமாக மாட்டிக் கொண்ட நரி கீழே தள்ளப்பட்டு உயிரைவிட்டது. ஆட்டுச் சண்டையில் குள்ளநரி செத்தது. இந்த வேடிக்கையைப் பார்த்துக் கொண்டிருந்த சந்நியாசி தன்னை மறந்து நின்று கொண்டிருந்தார்.
 
இதுதான் சரியான சந்தர்ப்பம் என எண்ணிய சீடன் பணமுடிப்பை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான்.
 
நரி சாகப்போகிறதே என நினைத்து, அதை வேடிக்கை பார்த்துக் கொண்டே தன்னுடைய பணமூட்டையை இழந்தார் அறிவுகெட்ட தேவசன்மா.

நன்றி சிறுவர் மலர்


Nama Anda
New Johny WussUpdated: Thursday, February 28, 2013

3 comments:

Unknown said...

நான் சமீபத்தில் http://www.valaitamil.com/literature_short-story என்ற வலைதளத்தை பார்த்தேன். அதில் அறிய எழுத்தாளர்களின் அறிய சிறுகதை தொகுப்புகளை பார்த்து வியந்து போனேன். நீங்களும் சென்று பாருங்களேன்'.

muhaden said...

Evenda indha muttal emattru kadai eludhi awan idhellam oru kadhaya

Unknown said...

Mokka story

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
Powered by Blogger.

Popular Posts

CB