தினம் தினம் ஏராளமான பணி வாய்ப்புகள்

Home » » ஒண்ணு தா!

ஒண்ணு தா!

Written By Eugin Bruce on Wednesday, May 29, 2013 | Wednesday, May 29, 2013

அண்ணனூர் என்ற ஊரில் தினேஷ் என்பவன் இருந்தான். அவனுக்கு சந்துரு என்ற நண்பன் இருந்தான்.

ஒருநாள் சந்துருவை சந்தித்தான் தினேஷ்.

""நண்பரே, நீர் ஒருநாள் எனது வீட்டுக்கு வரவேண்டும்,'' என்று அவனுக்கு அழைப்பு விடுத்தான் தினேஷ்.

""வரும் ஞாயிற்றுக்கிழமை நான் உமது வீட்டுக்கு வருகிறேன்,'' என்று உறுதி கூறினான் சந்துரு.

அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தான் தினேஷ்.

""ஞாயிற்றுக்கிழமை நம் வீட்டுக்கு ஒரு நண்பர் வருவார். இந்த மாம்பழம் அவருக்காகத்தான் வாங்கி வந்தேன். காலையில் இதன் தோலை சீவி, கீற்றுக் கீற்றாக வெட்டி தட்டில் தயாராய் வைத்திரு,'' என்று வேலைக்காரனிடம் கூறினான் தினேஷ்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் வேலைக்காரன் மாம்பழத்தை வெட்டினான். தோலை சீவி எடுத்து பழத்தை கீற்றுக் கீற்றாக துண்டு போட்டான். பழத்தின் மணம் அவன் மூக்கைத் துளைத்து எடுத்தது. வேலைக்காரனால் தன் நாவை அடக்க முடியவில்லை. ஒரு துண்டு பழத்தை எடுத்து வாயில் போட்டான். அதன் சுவை அவன் நாக்கில் நீர் ஊறச் செய்தது.

அவன் இன்னொரு துண்டை எடுத்து தின்றான். அவன் ஆசை அடங்கவில்லை. ஒரு பழம் முழுவதையும் தின்றான். இரண்டாவது பழத்திலும் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டான். இப்படியே இரண்டாவது பழமும் காலியானது. இரு பழங்களின் கொட்டைகளையும் சூப்பி அதில் ஒட்டியிருந்த சதையையும் தின்றான். பின்னர் கொட்டைகளை வெளியே எறிந்தான்.

வேலைக்காரன் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். அங்கு ஒரு மனிதர் வந்து கொண்டிருந்தார். அவர்தான் முதலாளி அழைத்த மனிதர் என அறிந்தான். அவன் மூளை துரிதமாக வேலை செய்தது. உடனே ஒரு துருப்பிடித்த கத்தியை எடுத்தான். அதை முதலாளியிடம் கொடுத்தான்.

""ஐயா, இந்த கத்தியால் மாம்பழத்தை அறுக்க முடியவில்லை,'' என்றான்.

""கத்தியை, நான் தீட்டித் தருகிறேன்,'' என்று சொல்லி, அதை வாங்கிக் கொண்டு தோட்டத்துக்குச் சென்றான் முதலாளி.

அங்கிருந்த கல்லில் அதை தீட்டினான். ""கூர்மையாக தீட்டி வையுங்கள்,'' என்று சொல்லி விட்டு வேலைக்காரன் வீட்டுக்குள் சென்றான். புதிதாக வந்த மனிதர் அதற்குள் நண்பன் வீட்டின் முன் வந்து நின்றான். அவன் வந்ததும், ""எச்சரிக்கை, எச்சரிக்கை! வீட்டுக்குள் நுழைய வேண்டாம். என் முதலாளிக்கு பைத்தியம் பிடித்துள்ளது. உமது இரு காதுகளையும் அறுக்க அவர் திட்டமிட்டுள்ளார்,'' என்று அவன் காதில் மட்டும் படும்படிக் கூறினான்.

வேலைக்காரன் ரகசியமாகச் சொன்னதைக் கேட்டதும், சந்துருவுக்கு கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.

""எனது காதை அறுக்கத் திட்டமிட்டுள்ளாரா! ஏன்?'' என்று கேட்டான்.

""அதோ பாருங்கள், அவர் கத்தியை தீட்டிக் கொண்டு இருக்கிறார்,'' என்றான் வேலைக்காரன்.

வேலைக்காரன் காட்டிய திசையில் பார்த்தான். அங்கே தினேஷ் கையில் ஒரு கத்தி இருந்தது. அவன் ஆவேசம் வந்தவன் போல் அதை ஒரு கல்லில் தீட்டிக் கொண்டிருந்தான்.

"அவனுக்கு பித்துப் பிடித்துள்ளதா? ஏன் அப்படிச் செய்கிறான்?''சந்துருவால் புரிந்து கொள்ள முடியவில்லை.

"எனது காதை அவன் ஏன் அறுக்க வேண்டும்?' அவனால் காரணத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால், தினேஷ் இன்னும் கத்தியை தீட்டிக் கொண்டுதான் இருந்தான்.

"சரி, வலிய வந்து மாட்டிக் கொள்ள தலைவிதியா? நமக்கேன் வம்பு?' என்று எண்ணிய சந்துரு புறப்பட்டான். தப்பித்தால் போதும் என்ற எண்ணத்துடன் எவ்வளவு வேகமாக போக முடியுமோ அவ்வளவு வேகமாக நடந்தான்.

உடனே வேலைக்காரன் தினேஷிடம் சென்றான்.

""ஐயா, நீங்கள் அழைத்த மனிதர் இரண்டு மாம்பழங்களையும் எடுத்துக் கொண்டு வேகமாக ஓடுகிறார்!'' என்றான்.

""பேராசைக்கார சந்துரு இரண்டு பழங்களையும் எடுத்துக் கொண்டானா?''
""ஆம் ஐயா, இரண்டையும் எடுத்துக் கொண்டார்!''

உடனே தினேஷ் கையில் கத்தியுடன் எழுந்து சந்துரு பின்னால் ஓடினான்.
""எனக்கு ஒன்று கொடு; ஒன்றை மட்டும் கொடு,'' என்று கத்தினான்.

"என்ன, என்னோட ஒரு காதையாவது தா என்கிறானே? அகப்பட்டால் இரண்டு காதையும் அறுத்து விடுவான்' என்று எண்ணிய சந்துரு உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் வேகமாக ஓடி மறைந்தான்.

தன் திட்டம் பலித்ததை எண்ணி மகிழ்ந்தான் வேலைக்காரன்.

நன்றி சிறுவர் மலர்
Share this article :

1 comments:

Akbar and birbal stories in tamil said...

அருமையான கதை!!!

Popular Posts

Powered by Blogger.
 
Support : Your Link | Your Link | Your Link
Copyright © 2013. தமிழ் சிறுகதை - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger