பொற்காசு

Posted by Esha Tips on Friday, May 05, 2017

முன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு மீன் என்றால் உயிர். ஒருநாள் மீனவன் ஒருவன் மிகவும் அழகான பெரிய மீன் ஒன்றை அரசவைக்குக் கொண்டு வந்து அரசனிடம் தந்தான்.  அந்த மீனைக் கண்டு மகிழ்ந்த அரசன் மீனவனுக்கு உடனே நூறு பொற்காசுகள் பரிசளிக்குமாறு கட்டளை இட்டான். பக்கத்திலே அமர்ந்திருந்த அரசிக்கு இந்தச் செயல் பிடிக்கவில்லை.

அரசனைப் பார்த்து, ""நாளைக்கே நம் வீரர்கள் யாரேனும் செயற்கரிய வீரச் செயல் செய்து வந்தால், நீங்கள் வழக்கம் போல நூறு பொற்காசுகள் பரிசளிப்பீர்கள். ஆனால், பரிசு பெறுபவன், ஒரு மீனவனுக்குக் கொடுத்ததைத்தானே, அரசர் நமக்கும் தந்துள்ளார் என்று நினைப்பான். அதனால், அந்த மீனவனுக்குக் கொடுத்த பரிசை ஏதேனும் சொல்லித் திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள்!'' என்றாள்.

""நீ சொல்வது சரிதான். ஆனால், கொடுத்த பரிசை மற்றவர் குறை சொல்லாதபடி எப்படித் திரும்ப வாங்குவது?'' என்று கேட்டான் அரசன்.

""அந்த மீன் ஆணா? பெண்ணா? என்று கேளுங்கள். அவன் ஆண் என்று சொன்னால் பெண் மீன் வேண்டும் என்று மீனைத் திருப்பித் தந்து விடுங்கள். பெண் என்று சொன்னால் ஆண் மீன் வேண்டும் என்று சொல்லுங்கள்!'' என்றாள் அவள்.

அரசனுக்கு தன் மனைவியின் அறிவுரை மிக நல்லதாகப்பட்டது.
மீனவனைப் பார்த்து, ""நீ கொண்டு வந்த மீன் ஆண் மீனா, பெண் மீனா?'' என்று கேட்டான்.

அதற்கு அந்த மீனவன் பணிவாக, ""அரசே! இது ஆணுமல்ல, பெண்ணும் அல்ல, பொதுவான மீன்!'' என்றான்.

மீனவனிடமிருந்து தான் சற்றும் எதிர்பாராத பதில் வந்ததைக் கண்டு அரசன் பெரிதும் மகிழ்ந்தான். அந்த மகிழ்ச்சியில் அவனுக்கு மேலும் நூறு பொற்காசுகள் தரும்படி கட்டளை இட்டான்.

""ஐயோ! நூறு பொற்காசுகள் கொடுத்ததே அதிகம். அதைத் திரும்ப வாங்குங்கள் என்றால், மேலும் நூறு பொற்காசுகள் தந்துவிட்டீர்களே!'' என்று கோபத்துடன் சொன்னாள் அரசி.

""நான் மகிழ்ச்சி அடையும் போதெல்லாம் நூறு பொற்காசுகள் பரிசு தருவது வழக்கம். இப்போது அவன் சொன்ன பதிலால் மகிழ்ச்சியடைந்து அவனுக்குப் பரிசு தந்தேன். என்ன செய்வது?'' என்றான் அரசன்.

இரண்டு பொற்காசுப் பைகளையும் பெற்றுக் கொண்ட மீனவன், அரசனை வணங்கி விடைபெற்றான்.

பையில் ஓட்டை இருந்ததால் திரும்பிச்செல்லும் போது ஒரு பொற்காசு கீழே விழுந்தது. இதைப் பார்த்த மீனவன் அந்தக் காசு எங்கே உள்ளது என்று தேடிக் கண்டுபிடித்துப் பையில் போட்டுக் கொண்டான்.

இதை அரசனும், அரசியும் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

உடனே அரசி, ""நீங்கள் அவனுக்கு இருநூறு பொற்காசுகள் பரிசு தந்தீர்கள். ஓர் பொற்காசு கீழே விழுந்தால் என்ன? நம் வீரர்கள் யாரேனும் எடுத்துக் கொள்ள மாட்டார்களா? எவ்வளவு பேராசை அவனுக்கு. இதையே காரணமாகக் காட்டி அவனுக்குக் கொடுத்த பரிசைத் திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள்!'' என்றாள்.

அரசனுக்கும் தன் மனைவி சொன்னது சரி என்றே பட்டது.

மீனவனை அழைத்து, ""கீழே விழந்த ஒரே ஒரு காசை ஏன் அவ்வளவு கடினப்பட்டுத் தேடினாய்? இருநூறு பொற்காசுகள் கிடைத்தும் உனக்கு நிறைவில்லையா?'' என்று கோபத்துடன் கேட்டான்.

மீண்டும் அரசனைப் பணிவுடன் வணங்கிய மீனவன், ""அரசே! அந்தப் பொற்காசு கிடைக்கவேண்டும் என்ற பேராசையால் நான் தேடவில்லை. இக்காசின் ஒரு பக்கத்தில் உங்கள் உருவமும், மற்றொரு பக்கத்தில் நம் அரசின் இலச்சினையும் பொறிக்கப்பட்டு உள்ளது. யார் காலிலேனும் இக்காசுபட்டுவிட்டால் பெருமை மிகுந்த தங்களை அவமதித்ததாக ஆகுமே என்பதற்காகத்தான் தேடினேன்!'' என்று பதில் தந்தான்.

சாமர்த்தியமான இந்த பதிலைக் கேட்டு மகிழ்ந்த அரசன் அவனுக்கு மேலும் நாறு பொற்காசுகள் பரிசளிக்கக் கட்டளை இட்டான்.

இதைக் கண்ட அரசி, இதற்குமேல் ஏதாவது யோசனை கூறினால், மேலும் பல பொற்காசுகளை இழக்க வேண்டியிருக்கும் என்று எண்ணி வாயை மூடிக்கொண்டாள்.

***

நன்றி தினமலர் சிறுவர்மலர்


Nama Anda
New Johny WussUpdated: Friday, May 05, 2017

2 comments:

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
Powered by Blogger.

Popular Posts

CB