முட்டாள் வேலைக்காரன்! (சிறுகதை)

Posted by Esha Tips on Tuesday, March 05, 2013

ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன்
 
ஒருநாள் அவனை அழைத்து, ""நம் வண்டியை எடுத்துக்கொண்டு பனங்காட்டுக்குப் போ... அங்கே பலர் பனைமரங்களை வெட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு இருப்பர். அதேபோல் நீயும் மரங்களை வெட்டிக்கொண்டு வா!'' என்றான்.
 
அப்படியே அவனும் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றான். அங்கே சிலர் மரங்களை வெட்டி வீழ்த்திக் கொண்டு இருந்தனர். சிலர், கீழே கிடக்கும் மரங்களை முயன்று வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்ததும் வேலைக்காரனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
 
"என்ன இவர்கள் எல்லாரும் முட்டாள்களாக இருக்கின்றனர். மரம் வெட்டும் போதே அதற்குக் கீழாக வண்டியை வைத்தால் மரம் அதில் சரியாக விழும். வீனாக ஒரு முறை பூமியில் கிடக்கும் மரத்தை வண்டியில் ஏற்ற வேண்டாமே!' என்று நினைத்தான்.
 
"என் திட்டத்தை இவர்கள் கண் முன்னாலேயே செய்து காட்டி, நான் எத்தகைய அறிவாளி என்பதைப் புரிய வைப்பேன்' என்ற எண்ணத்தில், தான் வெட்ட வேண்டிய பெரிய மரத்தை தேர்ந்தெடுத்தான்.
 
கோடாரியால் அந்தப் பனை மரத்தின் அடிப்பகுதியைப் பாதி அளவு வெட்டி முடித்தான். பிறகு, அந்த மரம் விழக்கூடிய இடத்திற்கு நேராக மாட்டுடன் வண்டியை நிறுத்தினான். மரம் வெட்டிக் கொண்டிருந்த மற்றவர்கள், "ஏன் இவன் இப்படிப் பைத்தியக்கார வேலை செய்கிறான்!' என்று நினைத்தனர்.
 
சிறிது நேரத்தில் அந்த மரம், "சடசட'வென்ற சத்தத்துடன் வண்டியின் மீது வேகமாக விழுந்தது. அவ்வளவுதான், வண்டி தூள் தூளானது. கால் உடைந்து குற்றுயிரும் குலை உயிருமாக மாடு துடித்துக் கொண்டிருந்தது. இதைக்கண்டு அவன் திகைத்து விட்டான். தன் திட்டத்தில் என்ன குறை என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
 
"என் திட்டம் நல்ல திட்டம் தான். வண்டிக்குத்தான் வலிமை இல்லாமல் போய்விட்டது' என்ற முடிவுடன் வீடு திரும்பினான். நடந்ததை அறிந்த வணிகன், முட்டாளாக இருக்கிறாயே! இப்படி செய்யலாமா? என்று வேலைக்காரனைத் திட்டினான்.
 
சில நாட்கள் சென்றன. திடீரென்று அந்த ஊரில் மண்ணெண்ணெய் பஞ்சம் வந்துவிட்டது.
 
"தன்னிடம் இருக்கும் இருபத்தைந்து பீப்பாய் எண்ணெயைப் பதுக்கி வைத்தால் நிறைய லாபம் கிடைக்கும்!' என்று நினைத்தான் வணிகன். உடனே வேலைக்காரனை அழைத்து, ""கடையில் இருக்கும் மண்ணெண்ணெய் எல்லாவற்றையும் இன்றிரவு நம் தோட்டத்தில் பள்ளம் தோண்டிப் புதைத்துவிடு. யாருக்கும் தெரியக் கூடாது!'' என்றான்.
 
வணிகன் சொன்னபடியே, நள்ளிரவில் பெரிய பள்ளம் தோண்டினான் வேலைக்காரன். ஒவ்வொரு பீப்பாயாக உருட்டிச் சென்று அதிலுள்ள எண்ணெயைப் பள்ளத்தில் ஊற்றினான். இப்படியே எல்லாப் பீப்பாய்களில் உள்ள எண்ணெயையும் ஊற்றி முடித்தான்.
 
இப்போது அவன் உள்ளத்தில், "இந்தக் காலிப் பீப்பாய்களை என்ன செய்வது? இது குறித்து முதலாளி ஒன்று சொல்லவில்யலையே!' என்ற சிந்தனை எழுந்தது.
 
"சரி, அவரையே கேட்டு விடுவோம்' என்ற எண்ணத்தில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த வணிகனை எழுப்பினான்.
 
""ஐயா! நீங்கள் சொன்னபடி மண்ணெண்ணெயைப் பள்ளம் தோண்டிப் புதைத்துவிட்டேன். காலி பீப்பாய்களை என்ன செய்வது என்று கேட்டான். வணிகனுக்குச் சிறிது சிறதாக உண்மை புலப்படத் தொடங்கியது. ஐயோ, "மண்ணெண்ணெய் எல்லாம் பேச்சே!' என்று அலறிய வணிகன், அன்றே அவனை வேலையிலிருந்து நீக்கினான்.
***


Nama Anda
New Johny WussUpdated: Tuesday, March 05, 2013

2 comments:

NSK said...

புத்திசாலியாக இருந்திருந்தால் முதலாளியின் பதுக்கலுக்கு உடந்தையாக இருந்திருப்பான்.

இப்பல்லாம் புத்திசாலிகள் சமூக அக்கறையுடன் இருக்கறது இல்லை போலும்.

Tamil Short Stories said...

வேலை செய்ய தகுதிஉள்ளவர்கள் அனேகர் இருந்தும்

தகுதிஇல்லாவர்களை வேலைகு வைத்தால் இப்படித்தான்

நடக்கும்!!!

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
Powered by Blogger.

Popular Posts

CB