வெகு காலத்திற்கு முன் தேவர்களும், அசுரர்களும் தீராப் பகை கொண்டிருந்தனர். அவர்கள் எப்போதும் போர் செய்தபடியே இருந்தனர். போரில் வெற்றி பெறுவதற்காக அவர்கள் வலிமை வாய்ந்த ஆயுதங்களை வைத்திருந்தனர்.
இந்நிலையில், "பாற்கடலில் அமுதம் உள்ளது. அதைக் கடைந்தால் அமுதம் கிடைக்கும். அந்த அமுதத்தை உண்பவர்கள் என்றும் சாகாமல் இருப்பர்,' என்ற செய்தியைத் தேவர்களும், அசுரர்களும் அறிந்தனர். பாற்கடலைக் கடைவது பெரிய முயற்சி. தேவர்களும், அசுரர்களும் ஒன்றாகச் சேர்ந்தால்தான் வெற்றி பெற முடியும் என்பது அசுரர்களுக்குப் புரிந்தது. எதிரிகளான அவர்கள் தேவை கருதி ஒன்று சேர்ந்தனர்.
"பாற்கடலைக் கடைய எவ்வளவு காலம் ஆகுமோ? அதுவரை தங்களிடம் உள்ள வலிமையான ஆயுதங்களை எங்கே பாதுகாப்பாக வைப்பது?' என்று அவர்கள் சிந்தித்தனர்.
இரு தரப்பினரும் தனித்தனியே ததீசி முனிவரிடம் வந்தனர். தங்களிடம் இருந்த ஆயுதங்களை அவரிடம் தந்தனர். ""இவற்றைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். பாற்கடலைக் கடைந்து முடித்ததும் பெற்றுக் கொள்கிறோம்,'' என்று சொல்லிவிட்டுச் சென்றனர். வலிமையான அந்த ஆயுதங்களை எப்படிப் பாதுகாப்பது என்று சிந்தித்தார் அவர். வேறு வழி தெரியாத அவர் அவற்றை விழுங்கிவிட்டார்.
அந்த ஆயுதங்கள் அனைத்தும் அவருடைய முதுகுத் தண்டில் சேர்ந்தன. பாற்கடலைக் கடைவதற்கு எண்ணற்ற ஆண்டுகள் ஆயின. அந்த முயற்சியில் தடைகள் பல ஏற்பட்டன. ததீசி முனிவரிடம் ஆயுதங்கள் கொடுத்ததையே தேவர்களும், அசுரர்களும் மறந்துவிட்டனர். அவரிடம் திரும்ப வந்து கேட்கவேயில்லை.
அசுரர் தலைவனான விருத்திராசுரன் தேவர்களை அழிப்பதற்காகக் கடுமையான தவம் செய்தான். அவன் தவத்தை மெச்சிய படைப்புக் கடவுள் அவன் முன் தோன்றினார். அவன் கேட்ட வரங்களைத் தந்தார். இதனால் வலிமை பெற்ற அவன் தேவர் தலைவனான இந்திரனோடு போர் செய்தான். அவனை எதிர்த்து நிற்க முடியாத இந்திரன் தோற்று ஓடினான். மூவுலகங்களையும் வென்றான் அவன்.
"என்ன செய்வது? எப்படி விருத்திராசுரனைக் கொல்வது?' என்று சிந்தித்தான் இந்திரன். இது குறித்து முனிவர்களிடம் அறிவுரை கேட்டான். ""விருத்திராசுரனைக் கொல்வது எளிய செயல் அல்ல. மிகவும் வலிமை வாய்ந்த ஆயுதத்தால்தான் அவனை வீழ்த்த முடியும். அப்படிப்பட்ட ஆயுதம் ததீசி முனிவரின் முதுகு எலும்புதான். அந்த எலும்பில் தேவ அசுர ஆயுதங்கள் அனைத்தும் சேர்ந்து உள்ளன.
அவர் உயிர்த் தியாகம் செய்தால்தான் அந்த எலும்பு கிடைக்கும்,'' என்றனர் அவர்கள். ததீசி முனிவரிடம் சென்றான் அவன். ""விருத்திராசுரனின் கொடுமைகளைத் தாங்காது மூவுலகங்களும் துன்பப்படுகின்றன. நீங்கள் நினைத்தால் அந்த அசுரனைக் கொன்று மூவுலகங்களையும் காப்பாற்ற முடியும்,'' என்றான்.
""நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள் செய்கிறேன்!'' ""உங்கள் முதுகெலும்பு தேவ அசுரர்களின் ஆயுதங்கள் சேர்ந்து மிக வலிமையாக உள்ளது. அந்த எலும்பால் செய்த ஆயுதத்தால்தான் அவனைக் கொல்ல முடியும்,'' என்று தயக்கத்துடன் சொன்னான் அவன். இதைக் கேட்ட அவர் உலகம் வாழத் தன் உயிரை இழக்கத் துணிந்தார். அவர் முதுகெலும்பில் ஆயுதம் செய்தான் அவன். அதற்கு வச்சிராயுதம் என்று பெயர் வைத்தான்.
அதை விருத்திராசுரனின் மீது விட்டான். அது அசுரனின் மார்பில் பாய்ந்து அவன் உயிரைக் குடித்தது. கொடிய அசுரன் மாண்டதை அறிந்து எல்லாரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
0 comments:
Post a Comment