ஒரு ஊரில் ஒரு பண்ணையார் இருந்தார். அவருக்குச் சொத்துக்கள் ஏராளமாக இருந்தன.
பண்ணையாருக்கு ஒரே ஒரு பெண்தான்! ஆனால், அந்தப் பெண் ஆணைப் போலவே வளர்ந்தாள். கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றாள். மேலும், கலை, இலக்கியம், இசை ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தாள்.
பெண்ணுக்கு தகுந்த மாப்பிள்ளை தேட முயற்சி எடுத்தார் பண்ணையார். வரக்கூடிய மாப்பிள்ளை தன் வீட்டோடு இருக்கக் கூடியவனாகப் பார்த்தார்.
பல மாதங்களாக பல ஊர்களில் பார்த்தும், எதுவும் பொருத்தமாக அமையவில்லை. எவருமே மாமனார் வீட்டில் தங்கும் மாப்பிள்ளையாக வர விரும்பவில்லை.
பக்கத்து ஊரில் பையன் ஒருவன் இருந்தான். அவனுக்கு தாய், தகப்பன் இல்லை. கல்லூரியில் படிக்க வசதி இல்லை. சிற்றப்பன் வீட்டில் தங்கி இருந்தான். அவன் வேலை தேடியும், விண்ணப்பம் போட்டுக் கொண்டும் இருந்தான்.
பண்ணையார் அவனைப் பற்றி விசாரித்தார்.
"அவன் ஏழையாக இருந்தாலும், பரவாயில்லை. அவனையே ஏற்பாடு செய்து, பெண்ணை திருமணம் செய்து கொடுத்து, அவனை வீட்டோடு வைத்துக் கொள்ளலாம்' என்று சிலர் கூறினர்.
அந்த ஏழை இளைஞனுக்கு தன் பெண்ணை திருமணம் செய்து வைத்தார் பண்ணையார். அந்த இளைஞனும் மாமனார் வீட்டில் மனைவி சொல்வதைக் கேட்டுக் கொண்டு, அமைதியாக இருந்து வந்தான்.
பண்ணையார் காசிக்கு யாத்திரை சென்றார்.
ஒருநாள், பாடகர் ஒருவர், தம் குழுவினருடன் பண்ணையார் வீட்டுக்கு வந்தார்.
""ஊர்தோறும், செல்வந்தர் வீடுகளில் பாடுவது வழக்கம்,'' என்றார்.
""பண்ணையார் யாத்திரை சென்றுள்ளார். எனக்கு இசையில் விருப்பம் இல்லை. நீங்கள் பண்ணையார் வந்த பிறகு வரலாம்,'' என்றார் மாப்பிள்ளை.
பாடகர் வருத்தத்தோடு புறப்படத் தயாரானார்.
அப்போது, குளித்து விட்டு வந்த பண்ணையார் மகள், ""வந்தவர் யார் எதற்காக வந்தார்கள்?'' என்று கேட்டாள்.
""பாடகர், பாடினால் சன்மானம் பெறலாம் என்று வந்துள்ளார். பண்ணையார் யாத்திரை போயிருக்கிறார். அவர் வந்த பிறகு வரலாம் என்று கூறி அனுப்பினேன்,'' என்றான் மாப்பிள்ளை.
""நம்பிக்கையோடு வந்தவரை வெறுமனே போகச் சொல்வது முறையல்ல, என்று கூறி பாடகரை வரவழைத்து இசை நிகழ்ச்சி நடத்தும்படி ஏற்பாடு செய்தாள் பண்ணையார் மகள்.
""எனக்கு இசையே தெரியாது. நான் எப்படி சபையில் இருந்து ரசிப்பது?'' என்றான் மாப்பிள்ளை.
""அதை நான் கவனித்துக் கொள்கிறேன்,'' என்று கூறிவிட்டு அவன் குடுமியில் ஒரு நூலைக் கட்டி, அதை தன்கையில் பிடித்துக் கொண்டு, பின்வரிசையில் அவள் இருந்தாள்.
பாடகர் உற்சாகமாகப் பாடிக் கொண்டிருந்தார். பாட்டுக்கு ஏற்றபடி நூலை ஆட்டிக் கொண்டிருந்தாள் பண்ணையார் மகள்.
அவ்வவ்போது மாப்பிள்ளையின் தலை அசைந்து ஆடியது.
"மாப்பிள்ளை நல்ல ரசிகராக இருக்கிறாரே' என்று பாடகர் நினைத்து, மேலும், சிறப்பாகப் பாடிக் கொண்டிருந்தார்.
திடீரென்று பாடகரைப் பார்த்து, ""உம்முடைய பாட்டை நிறுத்தும்!'' என்றார் மாப்பிள்ளை.
பாடகர் திடுக்கிட்டார். பாட்டில் ராகத்தில் ஏதேனும் தவறு நேர்ந்து விட்டதோ என்று குழப்பத்தில் ஆழ்ந்து பாட்டை நிறுத்தி விட்டு, மாப்பிள்ளைப் பார்த்தார்.
""என் குடுமியில் கட்டியிருந்த நூல் அறுந்து விட்டது!'' என்றார் மாப்பிள்ளை.
பாடகர் உட்பட அனைவருக்கும் சிரிப்புத் தாங்க முடியவில்லை.
அதன்பிறகு ஒரு பாடகரைக் கொண்டு மாப்பிள்ளைக்கு இசைப்பயிற்சி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.
ஏழையாக இருப்பது குற்றம் இல்லை; ஆனால், முட்டாளாக இருக்கக் கூடாது.
நன்றி சிறுவர்மலர்
1 comments:
Try to Understand or at least try to Act
Try to fix with the situation
A BASHEER AHMED
Post a Comment