ஒரு சிறிய கிராமம் ஒன்றில் தியாகு என்ற தச்சன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவியின் பெயர் சர்மிளா.
தியாகு ஏழையாக இருந்தாலும் சிறந்த உழைப்பாளி. அவன் அவ்வப்போது அருகி லுள்ள காட்டிற்குச் சென்று நன்கு விளைந்த மரங்களை வெட்டி வருவான். அம்மரங் களில் அழகான மேசை, நாற்காலி போன்ற வற்றை உருவாக்கி, அருகிலுள்ள ஊர்களில் விற்று வருவான்.
தியாகு மிக எளிமையான மனிதனாக இருந்தாலும், அவனது மனைவி சர்மிளா அவனுக்கு எதிர்மாறாக இருந்தாள். அவள் வீட்டு வேலைகளைக் கூட சரியாகக் கவனிக்க மாட்டாள். எப்போதும் முகம் பார்க்கும் கண்ணாடி முன்னே அமர்ந்து தன்னை அலங்கரித்துக் கொண்டிருப்பாள். தன்னை எல்லாரும், "அழகி' என்று அழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் அவள்.
ஒருநாள் வழக்கம்போல், தியாகு காட்டிற்கு மரம் வெட்டச் சென்றான். அவனது உழைப்பை அறிந்த வனதேவதை அவன் முன்னே தோன்றி, ""மகனே! நீ இத்தனைக் காலம் உழைத்து வருவதை நான் அறிவேன். நான் உனக்கும், உன் மனை விக்கும் மூன்று வரங்கள் தருகிறேன். இவ்வரத்தின் மூலம் நீ உன் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். மூன்று முறை மட்டுமே நீ சொல்வது பலிக்கும்!'' என்று கூறிவிட்டு மறைந்தது.
வரம் பெற்ற தியாகுவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை. "அவன் அவ்வரங்களின் மூலம் தன் வாழ்க்கைக்குத் தேவையான வற்றைப் பெற நினைத்தான். இருப்பினும் தன் மனைவியின் ஆலோசனைகளைக் கேட்கலாம்' என்று நினைத்து நேராகத் தன் வீட்டிற்கு ஓடினான்.
வீட்டிற்குச் சென்ற தியாகு, தன் மனைவி சர்மிளாவிடம் தான் வரம் பெற்ற செய்தியை மகிழ்ச்சியுடன் கூறினான். பிறகு என்னென்ன கேட்கலாம் என்று ஆலோசனையும் கேட்டான்.
சர்மிளா அலங்கார விரும்பி அல்லவா? அவள் உடனே, ""முதல் வரமாக நான் இந்த நாட்டிலேயே மிகச்சிறந்த அழகியாக மாறுவதற்கான வரம் கேட்கப் போகிறேன்!'' என்று கூறினாள்.
தியாகுவிற்கு தன் மனைவியின் யோசனை பிடிக்கவில்லை.
""வேண்டாம் சர்மிளா! நாம் நம் வாழ் நாளுக்குத் தேவையான செல்வங்களைக் கேட்கலாம்!'' என்று கூறினான்.
சர்மிளா கணவனின் யோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை. அவள் தன் விருப்பத்திலேயே பிடிவாதமாக இருந்தாள்.
அவள், ""நான் இந்நாட்டின் மிகச்சிறந்த அழகியாக மாற வேண்டும்!'' என்று வேண்டிக் கொண்டாள். மறுநிமிடமே அவள் மிகச்சிறந்த அழகியாக உருமாறினாள்.
சர்மிளாவின் செய்கை தியாகுவிற்கு கோபத்தை வரவழைத்தது.
""சர்மிளா உனக்கு அறிவில்லையா? ஒரு வரத்தை வீணாக்கி விட்டாயே!'' என்று அவளைத் திட்டினான்.
கணவன் தன்னைத் திட்டியதைக் கேட்ட சர்மிளாவிற்கு கோபம் வந்தது.
அவள் தியாகுவிடம், ""இனி நான் இங்கு இருக்க மாட்டேன். நான் என் தாய், தந்தையுடன் சென்று வசிக்கப் போகிறேன்!'' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுச் சென்றாள்.
தன் மனைவி தன்னைவிட்டுச் செல்வதைக் கண்ட தியாகுவிற்கு மனதில் வருத்தம் தோன்றியது. அவன் தன் மனைவியை சமாதானம் செய்ய அவள் பின்னாலேயே சென்றான். ஆனால், அவளோ கணவின் பேச்சைக் கேட்காமல் தாய் வீடு இருக்கும் அடுத்த ஊரை நோக்கி நடைபோட்டாள்.
அவ்வேளையில் அந்நாட்டு அரசன் தன் பரிவாரங்களுடன் யானை மீது அவ் வழியே வந்து கொண்டிருந்தார். அரசர் அவ்வழியே சென்ற சர்மிளாவைக் கண்டார். அந்நாட்டில் அவளைப் போல ஒரு அழகியைக் கண்டதே இல்லை.
எனவே அரசருக்கு சர்மிளாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அவர் தன் படைவீரர் களை அழைத்து, சர்மிளாவை இழுத்து வரும்படி உத்தரவிட்டார்.
படைவீரர்களும் சர்மிளாவை நோக்கி விரைந்தனர். அவர்கள் சர்மிளாவின் கைகளைப் பிடித்து அரசரிடம் இழுத்துச் சென்றனர்.
சர்மிளாவிற்கோ அழுகை வந்தது.
"கணவனிடம் கோபித்து இவ்வாறு படை வீரர்களிடம் மாட்டிக் கொண்டோமே' என்று எண்ணி வருந்தினாள். படைவீரர்களிடம் தன்னை விட்டுவிடுமாறு கதறினாள். ஆனால், அவர்கள் அதற்கு சிறிதும் செவிசாய்க்க வில்லை.
நடந்தவை அனைத்தையும் தியாகு பார்த்துக் கொண்டுதான் இருந்தான். தன் மனைவியை படைவீரர்கள் இழுத்துச் செல்வதைக் கண்ட தியாகுவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
திடீரென்று அவனது மனதில் வன தேவதையின் வரம் நினைவிற்கு வந்தது. படைவீரர்களிடமிருந்து தன் மனைவியை விடுவிக்க ஒரே வழி இதுதான் என்று அவன் நினைத்தான்.
""இப்போது என் மனைவி ஒரு குரங்காக மாற வேண்டும்!'' என்று வனதேவதையை மனதில் நினைத்து வேண்டினான் தியாகு.
மறுநிமிடமே அவள் ஒரு குரங்காக மாறி விட்டாள். வனதேவதை தந்த இரண்டாவது வரமும் வீணாகிவிட்டது.
படைவீரர்கள் குரங்குடன் அரசரை நெருங்கினர். படைவீரர்கள் ஒரு குரங்கை இழுத்து வருவதைக் கண்ட அரசருக்குக் கடுமையான கோபம் வந்தது.
அவர், ""நான் அழகியை இழுத்து வரச் சொன்னேன். நீங்கள் ஒரு குரங்கை பிடித்து வந்திருக்கிறீர்களா?'' என்று கோபத்தோடு கேட்டார். அப்போதுதான் படைவீரர்கள் திரும்பிப் பார்த்தனர். அவர்கள் கையில் அகப்பட்டிருந்தது குரங்கு என்பது அவர் களுக்கும் தெரிந்தது.
குரங்கைக் கண்ட அதிர்ச்சியில் அவர்கள் கைகளை விடுவித்தனர். இதுதான் தக்க சமயம் என்று எண்ணிய குரங்கு அருகி லிருந்த காட்டுக்குள் ஓடித் தப்பியது.
தான் கண்ட அழகி எப்படியோ தப்பித்து விட்டாள் என்பதை அறிந்த அரசரும், தன் பரிவாரங்களுடன் வந்த வழியே சென்றார்.
தியாகுவிற்கோ இப்போது வேறு கவலை முளைத்தது. குரங்காய் மாறி காட்டுக்குள் ஓடிய தன் மனைவியை மீட்க வேண்டும் என்பதே அந்தக் கவலை!
அவன் மீண்டும் வனதேவதையை மனதில் நினைத்து, ""குரங்காய் மாறிய என் மனைவி மீண்டும் பெண் உருவில் என்னிடம் வந்து சேர வேண்டும்!'' என்று வேண்டிக் கொண்டான்.
சிறிது நேரத்தில் காட்டிற்குள்ளிருந்து தியாகுவின் மனைவி சர்மிளா நடந்து வந்தாள். மீண்டும் தன் மனைவியைக் கண்ட தியாகு வின் மனதில் நிம்மதி தோன்றியது. ஆனால், வனதேவதை தந்த மூன்று வரங்களும் வீணாகிவிட்ட வருத்தமும், அவனுக்குள் எழவே செய்தது.
தியாகுவிடம் வந்து சேர்ந்த சர்மிளா, ""என்னை மன்னித்து விடுங்கள்! நீங்கள் சொன்னதுபோல வன தேவதை அளித்த மூன்று வரங்களையும் நம் வாழ்க்கைக்குத் தேவையான வற்றைப் பெறுவதற்குப் பயன்படுத்தியிருக்கலாம்.
""அதற்கு மாறாக, நான் உங்கள் யோசனையைக் கேட்காமல் அழகியாக வேண்டும் என்ற பிடிவாதத் தில் மூன்று வரங்களையும் வீணாக்கி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்! இனி கண்ணாடி முன்னே அமர்ந்து எப்போதும் அலங்காரம் செய்து கொண்டிருக்க மாட்டேன். என் உருவத்தைப் பற்றி கவலைப்பட மாட்டேன். உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வேன்!'' என்று உறுதி கூறினாள்.
தியாகுவும், தன் மனைவி திருந்தியதை அறிந்து மகிழ்ச்சியுற்றான். அவன் தன் மனைவியோடு தன் குடிசைக்குத் திரும்பிச் சென்றான்.
நன்றி தினமலர் சிறுவர்மலர்
3 comments:
அருமை
கதையின் கருத்து அருமையாக உள்ளது
கதையின் கருத்து அருமையாக உள்ளது
Post a Comment