அதி புத்திசாலிகள்!

Posted by Esha Tips on Friday, May 05, 2017

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழும் மக்கள், இந்த உலகத்திலேயே தாங்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சரியான முட்டாள்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.

ஒருநாள்-

அவர்கள் மரத்தால் ஒரு பெரிய வீடு கட்டத் தீர்மானித்தனர். அதற்கான நல்ல மரத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக அவர்கள் காட்டுக்குப் போக முடிவு செய்தனர். அப்போது, அவர்களில் மிகவும் அதிபுத்திசாலி யான ஒருவன் சொன்னான்.

''நான் குதிரை வண்டியில் ஏறி முதலில் போகிறேன். நீங்க ளெல்லாம் பின்னால் வாருங்கள்!'' என்றான்.

எல்லாரும் அதை ஏற்றுக் கொண்டனர்.

அதிபுத்திசாலி குதிரை வண்டியில் ஏறி காட்டுக்குப் பாய்ந்து சென்றான். ஆனால், வழியில் அவன் குதிரைவண்டி ஒரு கல்லின் மீது ஏறியதால் கவிழ்ந்தது. அவன் கையிலிருந்த கோடாரி தூரத்தில் சென்று விழுந்தது. அவனும் ஆழமான ஒரு குழியில் விழுந்து விட்டான்.

குதிரை வண்டிக்குப் பின்னால் வந்த மற்ற அறிவாளிகள், அதிபுத்திசாலியின் கோடாரி வழியில் கிடப்பதைப் பார்த்தனர். அவர்களில் மிகச் சிறந்த அறிவாளி அவன்தான் என்பதால், அவன் கோடாரியை விட்டுச் சென்றதற்கு ஏதும் முக்கியமான காரணம் இருக்கும் என்று மற்றவர்கள் நினைத்தனர். அதனால், எல்லாரும் மரம் வெட்டுவற்காகத் தங்கள் கையில் எடுத்து வந்திருந்த கோடாரியை அப்படியே போட்டுவிட்டுத் தொடர்ந்து சென்றனர்.

காட்டுக்குச் சென்று வெட்டுவதற்கு ஏற்ற மரத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், யார் கையிலும் கோடாரி இல்லையே, பிறகு எப்படி மரம் வெட்டுவது? எல்லாரும் ஒன்றாக அமர்ந்து இதற்கு என்ன வழியென்று சிந்தித்தனர்.

அங்கிருந்தவர்களில் முக்கியமான அறிவாளி சொன்னான்.

''நான் ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறேன். மரத்தை வெட்ட முடியவில்லை என்றாலும் நாம் மரத்தின் கிளையை ஒடிப்போம். இப்போது இருப்பதில் நான்தானே பெரிய அறிவாளி. அதனால் நான் முதலில் மரத்தில் ஏறி உறுதியான ஒரு கிளையைப் பிடித்துத் தொங்குகிறேன். அப்போது உங்களில் ஒருவர் என் காலைப் பிடித்துத் தொங்க வேண்டும். அவருடைய காலைப் பிடித்து மற்றொருவர் தொங்க வேண்டும். அப்படி நீண்ட சங்கிலி போல ஒருவர் காலை ஒருவர் பிடித்துத் தொங்கும் போது நம் பாரம் தாளாமல் கிளை ஒடிந்து கீழே விழும்!'' என்றான்.

அது மிகவும் நல்ல கருத்துதான் என்று எல்லாரும் ஏற்றுக் கொண்டனர். அவ்வாறு அந்த அறிவாளி பக்கத்திலிருந்த மரத்தில் ஏறி ஒரு உறுதியான கிளையைப் பிடித்து தொங்கினான். அவன் காலை மற்றொருவன் பிடித்துத் தொங்கி னான். அவன் காலை இன்னொருவன் பிடித்துத் தொங்கினான். இப்படியே எல்லாரும் ஒருவர் காலை ஒருவர் பிடித்துத் தொங்கினர். மிகப் பெரிய பாரத்தால் கிளை, எப்போது வேண்டுமானாலும் முறிந்து விடக்கூடிய நிலைக்கு வந்தது. அப்போது அறிவாளி சொன்னான்.

''நண்பர்களே, கிளை இப்போது ஒடிந்து விடும். அதற்கு முன்பு நான் இந்தக் கிளையை இன்னும் கொஞ்சம் பலமாகப் பற்றிக் கொள்கிறேன்!'' என்றான்.

கிளையை மேலும் வலுவாகப் பற்றிக் கொள்வதற்காக அவன் கையைச் சற்று அசைத்ததும் அவன் பிடி நழுவியது. எல்லாரும் கீழே விழுந்தனர். ஆனால், அந்த மரக்கிளையோ, முறியாமல் அப்படியே இருந்தது. இனி என்ன செய்வது என்று எல்லாரும் ஆலோசித்தனர். அந்தக் கூட்டத்தி லிருந்த வேறொரு அறிவாளி இப்படிச் சொன்னான்.

''நண்பர்களே, நாம் இந்த மரத்தின் கீழே தீ மூட்டுவோம். அந்த வெப்பத்தில் கிளை ஒடிந்து கீழே விழுந்துவிடும்!'' என்றான்.

எல்லாரும் அது ஒரு சிறந்த கருத்துத்தான் என்று ஏற்றுக் கொண்டனர். அந்த அறிவாளி அவனிடம் இருந்த ஒரே ஒரு தீப்பெட்டியை வெளியே எடுத்தான். ஆனால், அவனுக்கு ஒரு சந்தேகம். தீக்குச்சி ஏரியவில்லை என்றால் என்ன செய்வது? அவன் ஒரு தீக் குச்சியை உரசி பற்றி வைத்துப் பார்த்தான். அது எரிந்தது. ஆயினும் அடுத்த குச்சி எரியவில்லையென்றால் என்ன செய்வது? அவனுக்கு மீண்டும் சந்தேகம் வந்தது. அடுத்த தீக்குச்சியையும் அவன் பற்ற வைத்துப் பார்த் தான். அப்படி தீப்பெட்டியில் இருந்த எல்லா தீக்குச்சியும் தீரும்வரை அவன் உரசி உரசிப் பார்த்தான். கடைசியில் அவன் திருப்தியுடன் சொன்னான்.

''தீக்குச்சிகளெல்லாம் தீர்ந்துவிட்டன. ஆயினும் என்ன? எல்லா தீக்குச்சிகளும் நன்றாக எரியக்கூடியவைதான் என்று நமக்குத் தெளிவானது அல்லவா?'' என்றான்.

முன்பு மரத்திலிருந்து விழுந்த அறிவாளி, மற்றொரு கருத்தைச் சொன்னான்.

''நண்பர்களே, நான் முன்பு மரத்திலிருந்து கீழே விழுந்தபோது என் தலை கிளையில் மோதியது. அப்போது நான் நிறைய நட்சத்திரங்களையும், தீப்பொறிகளையும் பார்த்தேன். அது போன்ற தீப்பொறிகளை வைத்து நாம் இந்த மரத்தை எரிய வைக்க லாம். அதற்கு என்ன செய்ய வேண்டும்? நீங்கள் என் தலையில் மாறி மாறி அடிக்க வேண்டும். அப்போது நான் பார்க்கும் தீப்பொறிகளை நீங்கள் உடனே பிடித்துச் சேகரிக்க வேண்டும்!'' என்றான்.

நண்பர்கள் அதை ஏற்றுக்கொண்டனர். பிறகு அந்த அறிவாளியை மாறி, மாறி அடித் தனர். அடி வாங்கும்போது அவன் நிறைய நட்சத்திரங்களையும், தீப்பொறிகளையும் பார்த்தான். ஆனால், அதையெல்லாம் பிடித்து நண்பர்களிடம் கொடுப்பதற்கு அவனால் முடியவில்லை.

அவர்கள் மீண்டும் கூடி அமர்ந்து சிந்தித் தனர். அவர்களில் ஒருவன் அப்போது நல்ல படியாகச் சிந்தித்தான். அவன் சொன்னான்.

''நண்பர்களே, நாம் திரும்பிச் சென்று, வழியில் போட்டுவிட்டு வந்த கோடாரிகளை மீண்டும் எடுத்து வரலாம். அதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை!'' என்றான்.

அவ்வாறு அவர்கள் சென்று தங்கள் கோடாரிகளுடன் திரும்பி வந்தனர். தேவை யான மரத்தை வெட்டி எடுத்துக்கொண்டு கிராமத்துக்குச் சென்றனர்.
தங்களது புத்திசாலித்தனத்தை நினைத்து தங்களை தாங்களே மிகவும் மெச்சிக் கொண்டனர்.

நன்றி தினமலர் சிறுவர்மலர் 


Nama Anda
New Johny WussUpdated: Friday, May 05, 2017

0 comments:

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
Powered by Blogger.

Popular Posts

CB